கொரோனா தொற்று!! - கோவை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!!

      -MMH 


          கோவையில் கொரோனா பரவல் நாள் தோறும் அதிகரித்து வரும் நிலையில், ஒரே பகுதி அல்லது ஒரே வீதியை சேர்ந்த மூன்று அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டால் அந்த வீதி தடுப்புகள் கொண்டு அடைக்கப்படும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


         இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே வீதியில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். அடுத்த 14 நாட்களுக்கு அந்த பகுதி அல்லது வீதிகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


          கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெளியாட்கள் உள்ளே செல்வதற்கும், உள் இருக்கும் நபர்கள் வெளியே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடைகள் மற்றும் இதர கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


          கோவை மாநகராட்சி பகுதிகளில் தற்போது வரை 179 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பணியாளர்களை கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும் என்றும் கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments