கோவையில் அதிகரித்த கொரோனா!! - தனிமைப்படுத்தல் விதிமுறையில் அதிரடி மாற்றம்!!

       -MMH 


            கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அறிகுறியற்ற நோயாளிகளும் வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது.அவர்களும் கண்டிப்பாக குறைந்த பட்சம் ஒரு வாரம், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


             கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாவிட்டால் அவர்கள் வீட்டு தனிமையில் இருக்கலாம் என்ற விதிமுறை இதுவரை கோவை மாவட்டத்தில் இருந்தது.


வீட்டில் அனுமதியில்லை :


              அதே நேரம், ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்பது கட்டாயம். தற்போது கோவையில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதால், அங்கும் விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.


விதிமுறைகளை மீறும் நோயாளிகள்:


              உறுதி செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள் வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட அனுமதித்து இருந்தாலும், அவர்கள் அதை எல்லாம் மீறி தெருக்களில் நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளது. இதுவும் நோய் பரவலுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் ஒரு வாரம் சிகிச்சை மையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும்.


கொரோனா நெகட்டிவ்:


             சிகிச்சை பெறுவோருக்கு கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தால்தான், வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு ஏழு நாட்கள் கட்டாயமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். எனவே ஆக மொத்தம் 14 நாட்கள் அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


யாருக்கு விதிமுறை பொருந்தாது:


               அதேநேரம் ஏற்கனவே, கொரோனா நோய் பாதிப்புக்கு உள்ளாகி, தற்போது வீட்டு தனிமையில் இருப்போருக்கு இந்த விதி பொருந்தாது. இனிமேல் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாக கூடியவர்களுக்குதான் இந்த விதிமுறை பொருந்தும். இவ்வாறு சிகிச்சை மையங்களில் வைத்து சிகிச்சை அளிக்கும் போது அவர்கள் வெளியே நடமாடுவது கட்டுப்படுத்தப்படுகிறது. தனிப்பட்ட முறையில் அவர்களை கண்காணிக்க முடிகிறது என்பதுதான் இந்த விதிமுறை மாற்றத்திற்கான காரணம்.


கலெக்டர் ஆய்வு:


              இதனிடையே, கோவை மாவட்ட கலெக்டர் அந்த மாவட்டத்தில் உள்ள தனியார் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் அனைத்து பரிசோதனை மையங்களும், பரிசோதனைக்கு ஒரே மாதிரியான அளவீடுகளை கையாள வேண்டும். ஏனெனில் தற்போது சில மையங்களுக்கு இடையே பரிசோதனை முடிவுகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments