வாங்க லண்டனுக்கு பஸ்ல போலாம்!!!!!! -

-MMH


வாங்க லண்டனுக்கு பஸ்ல போலாம்!!!!!! -


     டெல்லியில் இருந்து லண்டனுக்கு சொகுசு பேருந்து இயக்கப்படவுள்ளது. இதன் கட்டணம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.


    விமான பயணங்களின் விஸ்வரூப வளர்ச்சிக்கு பின்னர், உலகம் சுருங்கி விட்டது. விமானங்கள் மூலமாக ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ஒரு சில மணி நேரங்களில் நம்மால் மிக எளிதாக சென்று விட முடியும். ஆனால் சாலை மார்க்கமாக பயணம் செய்து பல்வேறு நாடுகளை சுற்றி பார்ப்பதை விரும்புபவர்கள் இன்னும் இருக்கவே செய்கின்றனர்.நீங்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவர் என்றால், இந்த செய்தி நிச்சயமாக உங்களுக்கு உற்சாகம் அளிக்க கூடியதாகதான் இருக்கும்.



     ஹரியானா மாநிலம் குர்கானை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஒன்று, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு பேருந்து சேவையை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது."இந்த பேருந்தில் நீங்கள் பயணம் செய்தால், 18 நாடுகளை பார்க்கலாம். இந்த பயணத்தின் மொத்த தொலைவு சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர்கள். பயணம் நிறைவு பெற 70 நாட்கள் ஆகும். அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் (Adventures Overland) என்ற தனியார் சுற்றுலா நிறுவனம்தான் டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து சேவையை அறிவித்துள்ளது. இதற்கு 'பஸ் டூ லண்டன்' என பெயரிடப்பட்டுள்ளது.இந்த சுற்றுலாவை தேர்வு செய்யும் பயணிகள், மியான்மர், தாய்லாந்து, சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் உள்பட 18 நாடுகளின் வழியாக பயணம் செய்யலாம். "


     இந்த பயணத்திற்காக 20 இருக்கைகள் மட்டுமே கொண்ட பேருந்து பயன்படுத்தப்படும்.எனவே 20 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த 20 பயணிகள் தவிர ஓட்டுனர், உதவி ஓட்டுனர், சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள். இந்த நீண்ட பயணத்தின் போது குறிப்பிட்ட இடைவெளிகளில் சுற்றுலா வழிகாட்டிகள் மட்டும் மாறி கொண்டே இருப்பார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.அந்தந்த நாடுகளை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிகள் பயன்படுத்தப்படலாம்.


     உலகின் பல்வேறு நாடுகளின் வழியாக பயணம் செய்ய வேண்டியுள்ளதால், விசா தேவைப்படும். ஆனால் பயணிகளின் விசா பற்றிய எல்லாம் 'அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட்' நிறுவனம் பார்த்து கொள்ளும். வசதியுள்ளவர்கள் மத்தியில் இந்த பேருந்து பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த பயணமானது மொத்தம் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்படும். இதில், தங்களுக்கான விருப்பமான மற்றும் சௌகரியமான இடங்களை பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம்.



     அந்த குறிப்பிட்ட பேக்கேஜிற்கு உண்டான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. ஆனால் டெல்லியில் இருந்து லண்டன் வரை மொத்த பயணத்தையும் மேற்கொள்ள விரும்பினால், ரூ.15 லட்சம் செலவாகும் என கூறப்படுகிறது.இது ஒரு நபருக்கான கட்டணம் ஆகும். எனவே நிச்சயமாக வசதி படைத்தவர்களால் மட்டுமே இந்த பேருந்து பயணத்தை மேற்கொள்ள முடியும். டெல்லியில் இருந்து லண்டன் நகருக்கு முதல் பேருந்து வரும் 2021ம் ஆண்டு மே மாதம் புறப்படும் என நம்பப்படுகிறது.


     இந்த 70 நாட்கள் பயணத்தின்போது பயணிகள் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.பயணிகள் தங்குவதற்கு 4 நட்சத்திர அல்லது 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதிகளில் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். அத்துடன் அனைத்து நாடுகளிலும் இந்திய உணவுகள் பயணிகளுக்கு வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்த பயணம் பயணிகளுக்கு கண்டிப்பாக உற்சாகம் அளிக்க கூடியதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.விமானத்தில் சென்ற அயல் நாடுகளை கண்டு கொண்டு இருந்த நாம் பஸ்ஸில் பயணித்து அயல்நாடுகளை காண்பதற்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றி. 


-கிரி,கோவை மாவட்டம்.


Comments