சிமென்ட் விலையை நிர்ணயிக்ககோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்!- உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
-MMH
தமிழகம்தமிழகத்தில் சிமென்ட் விலையை நிர்ணயிக்ககோரிய வழக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
தமிழகத்தில் சிமென்ட் விலையை நிர்ணயிக்ககோரி தொடரப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து சிமென்ட் விலை அதிகரித்து வந்ததன் காரணமாக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒரு மூட்டை சிமென்ட் விலை 340 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.
ஆனால் அந்த விலையானது 13.23 சதவீதம் உயர்ந்து தற்போது 395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே சிமென்ட் விலையை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தேரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிமென்ட் விலையை நிர்ணயிப்பது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு இதுவரை கருத்தில் கொள்ளவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஆண்டுக்கு 80 லட்சம் டன் சிமென்ட் தயாரிக்கப்படும் நிலையில், அம்மா சிமென்ட் மற்றும் தமிழ்நாடு சிமென்ட் கழகங்கள் வெறும் 7 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்வதாகவும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை விட தற்போது தமிழகத்தில் ஒரு மூட்டைக்கு 65 ரூபாய் அதிகமாக விற்கப்படுவதால் தமிழத்தில் சிமென்ட் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கைவைக்கப்பட்டது. இதையடுத்து, சிமென்ட் விலையை நிர்ணயிக்ககோரி தொடரப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-R.ராஜேஷ், சென்னை மேற்கு.
Comments