கஞ்சா போதையில் ஒன்றரை வயதுள்ள தன் பிஞ்சுக் குழந்தையை கொன்ற கொடூரன் கைது!!
-MMH
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை நாகநாதபுரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. மீன் வியாபாரமும், காய்கறி வேன் ஓட்டும் பணியும் செய்து வருகிறார். பாம்பன் அக்காள்மடம் பகுதியைச் சேர்ந்த மரிய அவிஷ்டா என்ற பெண்ணை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் மரிய அவிஷ்டாவின் தங்கை திருமணம் அக்காள்மடத்தில் நடந்தது. திருமணத்துக்கு குடி மற்றும் கஞ்சா போதையில் முனியசாமி சென்றுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, தான் ஊருக்கு செல்வதாகவும் குழந்தையை தருமாறு கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். குடிபோதையில் இருந்த முனியசாமியிடம் குழந்தை கொடுக்க மரிய அவிஷ்டா மறுத்துள்ளார். அவரை தாக்கிவிட்டு குழந்தையை பிடிங்கிக்கொண்டு முனியசாமி சென்றுள்ளார். திருமணம் முடிந்து இரவு மரிய அவிஷ்டா வீடு திரும்பியபோது, முனியசாமியும் குழந்தையும் அங்கு இல்லை. சிறிது நேரத்துக்குப் பின் முனியசாமி மட்டும் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது குழந்தை குறித்து மரிய அவிஷ்டா கேட்டபோது, குழந்தை உறவினர் வீட்டில் இருப்பதாகச் சொல்லியுள்ளார். காலையில் தூக்கி வருவதாக கூறிவிட்டு படுத்துள்ளார். விடிந்ததும் குழந்தையை கேட்டுள்ளார் தாய் மரிய அவிஷ்டா. அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த மரிய அவிஷ்டா மண்டபம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மண்டபம் போலீசார் முனியசாமியைப் பிடித்து விசாரித்தபோது, திடுக்கிடும் தகவலைக் கூறியுள்ளார். அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே இருந்த கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில், தனது குழந்தையைக் கொலை செய்து தீவைத்து எரித்துவிட்டதாகக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
மனைவி மீதான கோபத்தில் இருந்த முனியசாமி, கஞ்சா மற்றும் மது போதையில் என்ன செய்வது என தெரியாமல் குழந்தையை இரக்கமின்றி எரித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
முனியசாமி கூறிய காட்டுப்பகுதிக்கு சென்ற போலீசார் கருகிய நிலையில் கிடந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றினர். கொலை வழக்கு பதிவு செய்த மண்டபம் போலீசார், முனியசாமியைக் கைது செய்தனர்.
காதல் திருமணம் செய்து பெற்ற குழந்தையை மனைவி மீதான கோபத்திலும், மது மற்றும் கஞ்சா போதையிலும் எரித்துக்கொன்ற சம்பவம் மண்டபம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பீர் முஹம்மது,குறிச்சி.
Comments