ஜிஎஸ்டி இழப்பீடு ரூ. 12250.50 கோடி உடனே வழங்க வேண்டும்!- மோடிக்கு முதல்வர் கடிதம்!!

    -MMH


     கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.


     அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏப்ரல் 1 முதல் தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. தமிழகத்திற்கு 12250.50 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளது.



     "கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுகிறேன்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


     நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது.


      இந்த வரி முறையில் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடுகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாநிலங்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி 14 சதவிகிதத்தை விடக் குறைவாக இருந்தால் மத்திய அரசு அதற்கான இழப்பீட்டை வழங்கும்.


     சென்ற ஜூலை மாத இறுதியில் 2019-20 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ.1,65,302 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. இதில், தமிழகத்துக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.12,305 கோடி வழங்கப்பட்டது.


     சென்ற நிதியாண்டுக்கான இழப்பீட்டுத் தொகை தாமதமாக வழங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டுக்கான இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு இன்னும் விடுவிக்காமல் உள்ளது. ஏற்கெனவே கொரோனா பாதிப்பால் நிதி நெருக்கடி நிலவும் சூழலில் ஜிஎஸ்டி இழப்பீடுநிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


- B.செந்தில் முருகன்,சென்னை தெற்கு.


Comments