பசிக்கொடுமையால், செத்த நாயை உண்ணும் கொடுமை!

               -MMH


   ரோட்டில் செத்து கிடந்த ஒரு நாயின் இறைச்சியை ஒருவர் பிய்த்து எடுத்து சாப்பிடுகிறார்.காதடைக்கும் பசியால், செத்து போன நாயை சாப்பிடும் அந்த நபரின் இந்த வீடியோ நெஞ்சை உலுக்கி எடுக்கிறது.


    நாடு முழுவதும் லாக்டவுன் உள்ளது. நிறைய பேருக்கு வேலை இல்லை கையில் காசு இல்லை. ஏராளமான தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அதில் பலர் மயங்கி விழுந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளை தூக்கியபடி தளர்ந்து செல்கிறார்கள். பிஞ்சுகள் காலில் செருப்பு கூட இல்லாமல் வெயிலில் நடந்து போகின்றன. இந்த காட்சிகள் எல்லாம் தினந்தோறும் வீடியோக்களாக வெளிவந்து மனசை பிசைந்து கொண்டிருக்கிறது.



 இந்நிலையில் இன்னொரு வீடியோ வெளியாகி எல்லோரையும் நிலைகுலைய வைத்தள்ளது. ராஜஸ்தான் ரோட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரதுமான் சிங் நருகா என்ற இளைஞர் காரில் சென்று கொண்டிருந்து இருக்கிறார். அப்போதுதான் அந்த கோர காட்சியை கண்டார். பார்த்ததும் நடுங்கி போய்விட்டார். நருகாவின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டிவிட்டது.


  உடனே செல்போனிலும் அதை வீடியோவாக எடுத்தார். அதில், மிக கொடூரமான பசிக்கு ஒரு நபர் ஆளாகி உள்ளார். ரோடு ஓரத்தில் ஒரு நாய் செத்து கிடக்கிறது. அது ஹைவேஸ் என்பதால் விபத்தில் சிக்கி அந்த நாய் இறந்திருக்கிறது. அந்த செத்து போன நாய் பக்கத்தில் அந்த நபர் சென்று உட்கார்ந்து, அதன் இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து எடுத்து தின்று கொண்டிருக்கிறார்.


 இதுதான் அந்த வீடியோ! இதில் கொடுமை என்னவென்றால், அந்த வீடியோவில் ஏராளமான வாகனங்கள் இதை பார்த்து கொண்டுதான் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. இந்த வீடியோ எடுத்த நருகா உடனே, அந்த இளைஞன் அருகில் சென்று, "ஏன் சாப்பிட எதுவும் இல்லையா, இதை சாப்பிட்டால் செத்து போய்டுவியே" என்று சொல்கிறார். அதற்கு அந்த இளைஞர் எதுவுமே பதில் சொல்லவில்லை . தொடர்ந்து நருகா, "என்கூட வா" என்று கூறி தன்னுடன் சாலையோரம் அழைத்து வருகிறார்.


  கொஞ்சம் சாப்பாடும், குடிக்க தண்ணீரும் தருகிறார். அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் அந்த நபர் உடனே அதை வாங்கி சாப்பிடுகிறார். இந்த வீடியோவை பதிவிட்ட நருகா, "யாராவது இதுபோன்ற நபர்களை பார்த்தால் தயவு செய்து உதவுங்கள்" என்று வீடியோவுடன் சேர்த்து இந்த பதிவையும் போட்டார். இந்த வீடியோவை பார்த்த அனைவருமே அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள். ஏராளமானோர் ஷேர் செய்து வருகிறார்கள். மக்கள் கண்ணீர் பதிவுகளை தெரிவித்து வருகிறார்கள். செத்த நாயை சாப்பிட்ட அந்த நபர் யார் என்ற விவரம் தெரியவில்லை , மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவும் தோன்றுகிறது. பசி கொடுமையால் எதை சாப்பிடுவது, எங்கு போய் கேட்பது என்று கூட தெரியாமல் இருந்திருக்கிறார். வந்தாரை வாழ வைக்கும் விவசாய நாட்டிலா என்ற கேள்வி அனைவரையும் துளைத்துகொண்டே இருக்கிறது.


 பட்டினியால் ஒரு மனிதர்கூட இருக்கக்கூடாது என்பதற்குத்தான் அரசு...?  நல்லா ஒளிருது டிஜிட்டல் இந்தியா.


-சுரேஷ்குமார், கிரி. 


Comments