வாகனங்கள் பறிமுதல்- போத்தனூர் போலீஸ் பரபரப்பு பேட்டி
-MMH
போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மகேஷ்வரன் அவர்கள், கொரோனா தொற்று நோயின் காரணமாக பொது ஊரடங்கு உத்தரவு அறிவித்த நாளிலிருந்து கோவை மாநகர் தெற்கு காவல் துணை ஆணையர் அவர்களின் ஆலோசனைப் படி, தீவிர முயற்சியின் காரணமாக போத்தனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா தொற்றின் தீவிரம் குறித்து பொதுமக்களிடையே பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தனிமனித இடைவெளியின் அவசியத்தைக் குறித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் போத்தனூர் காவல்நிலைய காவலர்களுடன் தீவிர முயற்சி எடுத்ததின் விளைவாக இன்று கொரோனா இல்லாத போத்தனூர் ஆக மாறியுள்ளது.
மேலும் நமது நாளைய வரலாறு புலனாய்வு ஆன்லைன் இதழில் கொரோனா தீவிரமாக இருந்த நேரத்தில் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் உதவும் நோக்கத்தில் ''அடங்க மறுக்கும் நபர்களுக்கு போத்தனூர் போலீஸ் எச்சரிக்கை'' என்ற செய்தியை வெளியிட்டு இருந்தோம். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்தில் சுமார் ஐந்தாயிரம் பொதுமக்கள் படித்தார்கள். இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் அரசுக்கும் பொதுமக்களுக்கும் இணைக்கும் பாலமாக நமது இதழ் இருந்ததற்கு நாம் மகிழ்ச்சி கொள்கிறோம் - கொரோனா தொற்று பரவாமல் இருக்க களத்தில் நின்று பணியாற்றிய போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கும் அவரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றிய போத்தனூர் காவல் நிலைய காவலர்களுக்கும் போத்தனூர் பொதுமக்கள் என்றென்றும் கடமைப் பட்டவர்களாக உள்ளார்கள் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுடன் சிறப்பு நேர்காணல் :
கேள்வி : கொரோனா தொற்று ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது உங்களுடைய செயல்பாடு எப்படி இருந்தது ?
பதில் : ஆரம்ப கட்டத்தில் இந்த தொற்றுடைய தாக்கம் இந்த அளவிற்க்கு வீரியமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் கண்டபிறகு ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மாவட்ட நிர்வாகம் மற்றும் எங்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த ஆலோசனைப்படி முதலில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுத்தோம். பொதுமக்களை கட்டுப்படுத்துவது எளிதான காரியமல்ல அவர்களுக்கு தொற்றின் தாக்கம் குறித்து முதலில் புரிய வைக்க வேண்டும் அதன்படி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ,காவல்துறை, பேரிடர், போன்ற நிர்வாகங்களை குழுவாக அமைத்து போத்தனூர் பகுதி முழுவதுமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினோம் அதன் விளைவாக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவதை தடுத்து நிறுத்தினோம், பொதுமக்களின் ஒத்துழைப்பும் சிறந்த முறையில் இருந்தது.
கேள்வி : கொரோனா தொற்று கண்டறிவதில் இருந்த சிக்கல் ?
பதில் : அந்த நாட்களை நினைத்தாலே என்னுடன் பணியாற்றிய சக காவலர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். காவலர்கள் தங்களுடைய குடும்பத்தை மறந்து அவர்களுடைய அன்றாட தேவைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பொது மக்களை காத்திட சிறப்பாக செயல்பட்டார்கள். தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்து செல்வது பெரும் சவாலாகவே இருந்தது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சில மக்கள் நம்மை போலீசார் அழைப்பது சிகிச்சைக்கா ? இல்லை வழக்குக்கா ? என்ற சந்தேகப் பார்வையில் எங்களைப் பார்க்கும்போது, நாங்கள் அவர்களிடம் "இது தொற்றுநோய்,உங்களிடமிருந்து உங்கள் குடும்பத்தாருக்கும், மற்ற அப்பாவி பொது மக்களுக்கும் பரவக்கூடும்.அதை தவிர்க்க எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்" என்று கூறி புரிய வைத்து ஒருவழியாக அவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தோம்.
கேள்வி : தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைப் பற்றி ?
பதில் : மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூலமாக தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து தனிமை படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அனைத்தும் பூட்டப்பட்டன.சாலைகளின் குறுக்கே தடுப்புகளை அமைத்து ஒரு பகுதியில் இருக்கும் மக்கள் மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாதவாறு தடுப்புகளை அமைத்தோம். இதில் பொதுமக்களும் தானாக முன்வந்து எங்கள் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். இதன் மூலம் தொற்று நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கேள்வி : சாலையில் சுற்றுபவர்களை கட்டுப்படுத்தியது எப்படி?
பதில் : அத்தியாவசிய தேவைக்காக வரும் பொதுமக்களுக்கு முகக் கவசம் கட்டாயமாக அணிந்து வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்தோம்.அத்தியாவசிய பொருட்களை வாங்க வருவது போல் சில நபர்கள் சாலையில் சுற்றி திரிந்தார்கள். அவர்களை கண்காணிக்க முடிவு எடுத்தோம். அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றாத கடைக்காரர்களிடம் முதலில் எச்சரித்தோம், சட்டவிதிகளை பின்பற்றாவிட்டால் கண்டிப்பாக கடையை பூட்டி சீல் வைத்து விடுவோம் என்றவுடன் நிலைமை கட்டுக்குள் வந்தது.
எந்த ஒரு காரணமும் இன்றி வாகனத்தில் வெட்டியாக சுற்றித்திரிந்த நபர்களை பிடிக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டு சுமார் 600-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசியமின்றி வாகனத்தில் சுற்றி திரிந்தவர்களை கட்டுப்படுத்த முடிந்தது. வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களும் சாலையில் சுற்றியதால் இவர்களின் மூலமாக என்னுடன் பணியாற்றிய சில காவலர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டது. அது எனக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியது. தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்கள் இன்று நலமுடன் வீடு திரும்பியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
கேள்வி : பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பது எப்படி ?
பதில் : பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்களை வரவழைத்து வாகன உரிமைச் சான்று, ஓட்டுனர் உரிமம் ,ஆதார் அட்டை , உறுதிமொழி கடிதம் பெற்றுக்கொண்டு வாகனங்களை அவரவர் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விட்டோம். ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் வழக்கு பதியப்பட்ட நபர்களை மீண்டும் அழைத்து குற்றப்பத்திரிக்கையை அவர்களிடம் அளிப்போம் .அதன் மூலமாக அவர்கள் நீதிமன்றத்தின் வாயிலாக வழக்குகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, மற்றும் வருவாய் துறை ,அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், என அனைவருக்கும் நமது நாளைய வரலாறு ஆன்லைன் புலனாய்வு இதழ் மற்றும் மக்கள் விழிப்புணர்வு அமைப்பின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
-ஸ்டார் வெங்கட், அருண்குமார், சந்தீப்.
Comments