புலிகள் மர்ம மரணம் ஆனைமலையில் நடப்பது என்ன
கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இது குறித்து வனத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி, உடுமலை ஆகிய ஆறு வனச் சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு, புலி, சிறுத்தை, யானை, செந்நாய், ராஜநாகம் உள்ளிட்ட பல்வேறு அரிய உயிரினங்கள் உள்ளன.
பொள்ளாச்சி வனச் சரகத்தில், போத்தமடை பீட் பகுதியில் 2 கி.மீ. இடைவெளியில் 8 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் புலியும், 8 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் புலியும் இறந்து கிடந்தன. உயிரிழந்துள்ள இரண்டு புலிகளின் உடலிலும் பெரிய காயங்கள் எதுவும் இல்லை . ஆரோக்கியமான உடல்வாகுடன் உள்ளன; நோய் வாய்ப்பட வாய்ப்புகள் குறைவு என்று வனத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய பகுதிகளில் கடந்த மாதம் புலி தாக்கி கன்றுகுட்டி, 5 ஆடுகள் உயிரிழந்தன. அதேபோல, தற்போது புலிகள் இறந்து கிடக்கும் போத்தமடை பீட் - புங்கன் ஓடை பகுதி அருகே கடந்த ஜனவரியில் புலி தாக்கி மாடு ஒன்று உயிரிழந்தது. இதனால், இந்தப் புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், புலிகள் உயிரிழந்ததற்காக காரணம் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரிய வரும். ஒரு புலி உயிரிழந்தால், அதை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு முன்பு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும். மேலும், புலிகளை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளதால், இந்தப் புலிகளின் உடல்கள் வியாழக்கிழமை உடற்கூறு ஆய்வு செய்யப்படவுள்ளன.
புலிகள் இறந்தது குறித்து வனத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி வனச் சரகத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்ததும், சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 2 புலிகள் அடுத்தடுத்து ஒரே சமயத்தில் இருந்துள்ளதால் பல சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுகிறது இது குறித்து வனத்துறை அதிகாரியிடம் கேட்டபோது உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் உடற்கூறு ஆய்வு வர கால தாமதம் ஆகும் என்று கூறினார்.
சமூக ஆர்வலர்களின் சந்தேகம் என்னவென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஒரு புலிக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு அந்த புலியை தனிமைப்படுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விலங்குகளுக்கும் கொரானா பரவ வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது இவ்விரு புலிகளுக்கும் கொரானா தொற்று இருக்காது என்றாலும் விரைவாக இவ்விரு புலிகளுக்கும் உடற்கூறு ஆய்வு செய்து பல கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
-M.SURESH KUMAR,POLLACHI. -MMH
Comments