காந்தியும் கோட்சேவும் கைகோத்து நடக்க முடியாது! நிதிஷ் குமாரை தாக்கிய பிரஷாந்த் கிஷோர்


பீகார் முதல்வர் நிதிஷ்குமார் காந்திய சிந்தனை பற்றி பேசுகிறார், அது எப்படி காந்தியும் அவரைக் கொன்ற கோட்சேவும் ஒன்றாக கை கோத்து நடக்க முடியம் என்று பிரஷாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரபல தேர்தல் வியூக அமைப்பாளர் பிரஷாந்த் கிஷோர் சில வாரங்களுக்கு முன்பு ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது கூட பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தான் பிரஷாந்த் கிஷோரை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். அனைத்துக்கும் நன்றி என்ற அளவிலேயே பிரஷாந்த் கிஷோர் பதில் அளித்திருந்தார்.



தற்போது நிதிஷ் குமாரை நேரடியாகவே தாக்கியுள்ளார் பிரஷாந்த் கிஷோர். நிதிஷ் குமாருடனான உறவு பற்றி மனம் திறந்துள்ள பிரஷாந்த் கிஷோர், "பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் எனக்கும் அரசியல் ரீதியான உறவு இருந்தது இல்லை . அவர் எப்போதும் என்னை அவருடைய மகன் போலவே நடத்தினார். எங்களைப் பற்றி அறிந்தவர்களுக்கு இது தெரியும். நானும் அவரை அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தேன். நிதிஷ் குமார் எப்போதும் நம்முடைய கட்சி காந்தியின் சிந்தனைகளை விட்டு விலகக் கூடாது என்று கூறுவார். ஆனால் தற்போது அவருக்கு காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே மீது கனிவான பார்வை வந்துள்ளது. என்னைப் பொருத்த வரை காந்தியும் கோட்சேவும் கை கோத்து செல்ல முடியாது.


2005-15க்கு இடைப்பட்ட காலத்தில் பீகார் முன்னேற்றம் பெரிய அளவில் இல்லை . பீகார் வளர்ச்சி அடையவே இல்லை . 2005ல் எப்படி இருந்ததோ அப்படியேதான் இருக்கிறது. இப்போதும் கூட பின்தங்கிய மாநிலமாகத்தான் பீகார் உள்ளது. பெண்கள் பள்ளிப் படிப்பைத் தொடர் அவர்களுக்கு மிதிவண்டியை வழங்கும் திட்டத்தைத் தொடங்கினார். பள்ளிகளை மேம்படுத்தினார். ஆனாலும் பீகாரில் படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது" என்றார்.                                                                                                                                 -MMH


Comments