7 நாள்தான் வீட்டை காலி பண்ணுங்க அகமதாபாத்


7 நாள்தான் வீட்டை காலி பண்ணுங்க அகமதாபாத் குடிசைவாசிகளுக்கு நோட்டீஸ் ட்ரம்ப் வருகை காரணமா? அகமதாபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பிப்ரவரி 24ம் தேதி இணைந்து அகமதாபாத் நகரிலுள்ள மோட்டேரா கிரிக்கெட் மைதானத்திற்கு வருகை தர உள்ள நிலையில், அதன் அருகே குடிசைப் பகுதியில் வசிக்கும் குறைந்தது 45 குடும்பங்களை இடத்தைக் காலி செய்யுமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


நீங்கள் ஏ.எம்.சி (அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன்)க்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளீர்கள். உங்கள் வீட்டிலுள்ள பொருட்களுடன், இன்னும் ஏழு நாட்களில் இந்த இடத்தை காலி செய்ய வேண்டும். இல்லையெனில், நிலத்திலிருந்து உங்களை, வெளியேற்ற துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.



உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மொட்டெரா மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதை ட்ரம்ப் மற்றும் மோடி திறந்து வைக்க உள்ளனர். இந்த மைதானத்திலிருந்து, சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் அகமதாபாத்தை, குஜராத் தலைநகர் காந்திநகருடன் இணைக்கும் சாலையில் இந்த குடிசைப் பகுதி அமைந்துள்ளது. குடிசைவாசிகளுக்கு இந்த நோட்டீஸ் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, ட்ரம்ப் வருகைதான், தங்களை காலி செய்ய உத்தரவிட காரணம் என சந்தேகிக்கிறார்கள். குடிசைவாசியான, ஷைலேஷ் பில்வா நிருபர்களிடம் அளித்த பேட்டியில், ஏ.எம்.சி அதிகாரிகள் கடந்த ஏழு நாட்களில் பல முறை இங்கே வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். "நாங்கள் 10 வருடங்களுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறோம். கடந்த காலங்களில் எங்களை ஒருபோதும் வெளியேற உத்தரவிட்டதே கிடையாது. இப்போது ஏன் இப்படி உத்தரவு வெளியாகியுள்ளது? என்று வினா எழுப்பினார்.


கூலித் தொழிலாளி தினேஷ் அட்ராவணி இதுபற்றி கூறுகையில், குடிசைவாசிகள் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்கு மாற்று தங்குமிடம் இல்லை. நாங்கள் வெளியேறத் தயாராக இருக்கிறோம், ஆனால் எங்களுக்கு ஒரு மாற்று இடம் தேவை. இல்லையெனில் நாங்கள் நடைபாதைகளில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் நாங்கள் இங்கு வாழ்கிறோம். இதை காலி செய்ய சொன்னால் எங்கே செல்வது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில், குடிசைவாசிகளை இடத்தை காலி செய்ய வெளியிட்ட அறிவிப்புக்கும், "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று துணை எஸ்டேட் அதிகாரி (மேற்கு மண்டலம்), சைதன்யா ஷா கூறியுள்ளார். பிடிஐயிடம் பேசிய அவர் "குடிசைவாசிகளுக்கு நகர திட்டமிடல் சட்டத்தின் விதிகளின் கீழ் வெளியேற அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. டிரம்ப்பின் வருகையுடன் எந்த தொடர்பும் இல்லை . இந்த இடம் ஏ.எம்.சி.க்கு சொந்தமானது. ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வையடுத்து இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, " என்று சைதன்யா ஷா கூறினார்.


நமஸ்தே டிரம்ப்" நிகழ்வின் ஒரு பகுதியாக பிப்ரவரி 24 ஆம் தேதி மொட்டேராவில் உள்ள சர்தார் படேல் மைதானத்தில் பிரதமர் மோடியும், டிரம்பும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குழுமியிருக்கும் நிகழ்ச்சியில், உரையாற்றவுள்ளனர். டிரம்ப் அகமதாபாத்தில் ஒரு ரோடுஷோவில் பங்கேற்கவும், அன்றே சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. ட்ரம்ப் வருகையையொட்டி, அகமதாபாத்திலுள்ள குடிசை பகுதிகளை மறைத்து சுவர் எழுப்பப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், குடிசைவாசிகளை காலி செய்யுமாறு அகமதாபாத் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது, மேலும் ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது.                                                           MMH


Comments