மார்ச் 1ம் தேதி முதல் பத்திர எழுத்தர்கள் ஆவண ரசீது கட்டாயம்
மார்ச் 1ம் தேதி முதல் பத்திர எழுத்தர்கள் ஆவண தயாரிப்புக்கு கட்டண ரசீது கட்டாயம் பத்திர எழுத்தர்கள் ஆவண தயாரிப்புக்கான கட்டண ரசீது வழங்குவது வரும் மார்ச் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்கள், துணை சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள், பத்திர எழுத்தர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்பதுடன், ஆவண எழுத்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் ஆவண எழுத்தர்கள் மீதான புகார்கள் தொடர்ந்து வருகிறது. எனவே, ஏற்கனவே அறிவுறுத்தியபடி சார்பதிவாளர், துணை சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர எழுத்தர்கள், இடைத்தரகர்களை அனுமதிக்க கூடாது. அதோடு பத்திர எழுத்தர்கள் கண்டிப்பாக ரசீது புத்தகத்தை தங்களுடன் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பொதுமக்களுக்கு பத்திர எழுத்தர்களால் ஆவணம் தயாரிப்பதற்கான கட்டண ரசீது வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆகவே, பத்திர எழுத்தர்கள் தங்களால் தயாரிக்கப்படும் ஆவணங்களுக்கான கட்டண ரசீதினை ஆவணதாரர்களுக்கு தவறாமல் வழங்க வேண்டும். மேற்படி கட்டண ரசீதுடன் ஆவணம் தாக்கல் செய்யப்படுவதை பதிவு அலுவலர்கள் உறுதி செய்து ஆவணப்பதிவு மேற்கொள்ள வேண்டும் என்று பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கட்டண ரசீதின் நகலை குறிப்பு ஆவணமாக, பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணங்களுடன் ஜெராக்ஸ் செய்து அலுவலக கோப்பில் கோர்த்து பராமரிக்க வேண்டும். இந்நடைமுறை வரும் மார்ச் 1ம்தேதி முதல் கண்டிப்பாக அமலுக்கு வரும் என்றும் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார். -MMH
Comments