தேசிய வேலைவாய்ப்பின்மை பதிவேடு தொடங்கிய காங்கிரஸ்
தேசிய குடிமக்கள் பதிவேடு எதிர்ப்பாக தேசிய வேலைவாய்ப்பின்மை பதிவேடு காங்கிரஸ் கட்சியால் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. ஜெய்பூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் இதனை தொடங்கி வைத்தார். குடியரிமைச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய வேலைவாய்ப்பின்மை பதிவேடு (என்ஆர்யு) காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல், இதனை வெளியிட்டார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்களிடம், வேலைவாய்ப்பற்றோர் 8151994411 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை அடையாளம் காணும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 5 லட்சம் இளைஞர்கள், தங்களுக்கு வேலையில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இணைந்துள்ளனர். இவர்களில் 58 ஆயிரம் பேர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது இதர மாநிலங்களை விட அதிக எண்ணிக்கையாகும். அடுத்த 3 மாதங்களுக்கு இந்த என்ஆர்யு போராட்டம் நடைபெறும். அப்போது நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் மொத்த எண்ணிக்கை தெரியவரும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
-MMH
Comments