கிராம பஞ்சாயத்துகள் டாஸ்மாக் கடை வேண்டாம் சட்டம்


கிராம பஞ்சாயத்துகள் டாஸ்மாக் கடை வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றினால், செயல்படுத்த ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு டாஸ்மாக் கடை வேண்டாம் என கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்த ஏன் சட்டம் கொண்டுவர கூடாது என்று தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றை இடமாற்றம் செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது அரசியல் அமைப்பு சட்டம் சார்ந்த பிரச்சனை என்றும் மாநில அரசு ஒரு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். சமூக நலன், பொதுமக்களின் உடல்நலம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வது கிராம பஞ்சாயத்துகளின் கடமை என்ற நீதிபதிகள், மாநில அரசு ஏன் கிராம பஞ்சாயத்துகளை மதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.



அரசின் கொள்கை முடிவுகள் காலதாமதம் செய்யப்படக்கூடாது என்றும் ஒரு ஆலோசனை கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள் இது தமிழகத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்தப் பிரச்சினை என்று தெரிவித்தனர். அப்போது ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பதாக தெரிவித்த அரசு 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், டாஸ்மாக் கடைகளில் இலக்கு வைத்து விற்பனை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடை வேண்டாம் என கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்தவும், பொது இடங்களில் மது குடிப்பதை தடுப்பது தொடர்பாகவும் சட்டங்கள் கொண்டுவருவது குறித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.                                                                                -MMH


Comments