வீடுகள் தரைமட்டம் ஜமாஅத் கடும் கண்டனம்
இந்தியாவில் 100 வீடுகள் தரைமட்டம் ஆக்கியதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம். குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனால் இந்தியர்களுக்கும், இந்திய முஸ்லிம்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று மிகப் பெரும் பொய்யை சொல்லி வருகின்றார். பெங்களூரின் வடக்கு பகுதியில் உள்ள அக்ரஹாரா பகுதியில் குடியிருக்கும் மக்களை வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சட்டவிரோதமாக குடி ஏறியவர்கள் என்று பாஜக எம்எல்ஏ அரவிந்த லிம்பா வள்ளி குற்றசாட்டு கூறி வந்தார். அதன்பேரில் அவர்களது 100 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
ஆனால் உண்மையில் அவர்களுடைய ஆவணங்கள் சரிபார்க்கப்படாமலேயே அவர்கள் பங்களாதேஷ் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற காரணம் சொல்லி இந்த அநியாயத்தை கர்நாடக பாஜக அரசு அரங்கேற்றியுள்ளது. இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடுமையாக கண்டிக்கிறது. அவர்கள் இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்களை கையில் வைத்துள்ளனர். அவற்றை சரி பார்க்காமலே அரசு இந்த கொடுஞ் செயலை நடத்தியுள்ளது. மத அடையாளங்களை வைத்து இவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று இந்த நிலையை அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் ஆதார், பான் கார்ட் மற்றும் வாக்காளர் ஐடி உள்ளிட்ட சரியான அடையாள அட்டைகள் உள்ளன.
இந்த நாட்டில் இந்த சட்டம் மூலமாக முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்று சொன்னால் நாங்கள் இஸ்லாமியர்களாக மாற தயார் என்று பிஜேபியினர் மேடைகளில் முழங்கி வருகின்றனர். இஸ்லாமியர்களின் வீடுகள் இப்பொழுது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு அவர்கள் அனாதைகளாக நிற்கக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதுடன் மாற்று இடம் ஏற்பாடு செய்து தரவேண்டும். அவர்களுக்கு தங்குவதற்கு தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இந்தியாவின் மதச்சார்பின்மையை அழிக்க கூடிய சட்டமாக CAA இருக்கிறது. ஒவ்வொரு மாநில முதல்வர்களும் NRC ஐ கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதுபோன்ற பாதிப்புகள் இந்தியாவிலேயே பல இடங்களில் நடக்கும் என்பதால்தான் CAA, NRC, NPR சட்டங்களையும், திட்டங்களையும் மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்.
இப்படிக்கு . இ.முஹம்மது, மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். -MMH
Comments