பயன் இல்லாத ஆழ்துளை கிணறுகள் கலெக்டர்

கோவை மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக சிமெண்ட் சிலாப்களை கொண்டு மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. இராசாமணி உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட அல்லது பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் சில அரசு மற்றும் தனியார் இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளதாக தகவல்கள் வருவதாக அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். எனவே அத்தகைய ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ள ஆட்சியர், இதனை மாநகராட்சி ஆணையாளர், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து சிறப்பு அலுவலர்கள் கண்காணிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். சிமெண்ட் ஸ்லாப்கள் கொண்டு இந்த வகை கிணறுகளை முழுமையாக மூட வேண்டும் என தெரிவித்துள்ள அவர் இதனை கிராம நிர்வாக அலுவலர்கள் உறுதி செய்வார்கள் எனவும் கூறியுள்ளார். அவ்வாறு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் உள்ள இடத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அவர் இது தொடர்பாக பொதுமக்கள் 1800-599-6000 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் ஆட்சியர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 


Comments