ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்

கோவையில் ஆம்புலன்ஸ் மூலம் கடத்தி வரப்பட்ட 500 கிலோ கஞ்சாவை என்ஐபி சிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர். உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் கஞ்சா போன்ற போதைப்பொருள்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தன. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஆந்திராவிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சாவைகடத்தி வந்து தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் விற்பனை செய்துவருவது தெரியவந்தது. இதனடிப்படையில், இன்று உடுமலைப்பேட்டை அருகே கோவை என்ஐபி சிஐடி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 250 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கருப்புசாமி வீட்டில் சோதனை செய்தனர். சோதனையில் மேலும் 250 கிலோ கஞ்சா சிக்கியது. இதையடுத்து 500 கிலோ கஞ்சா மற்றும், ஆம்புலன்ஸை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய கருப்புசாமியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


Comments