மன்மோகன் சிங் தாக்கு மோடிக்கு இயலவில்லை

ஐந்தரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பொருளாதார சரிவை சரிசெய்ய இயலவில்லையா ?: மன்மோகன் சிங் தாக்கு தனது தலைமையிலான அரசின் குறைபாடுகள் இருந்ததாக குற்றச்சாட்டுகளை பாஜக முன்வைத்த நிலையில், தனது தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அனைத்து பொருளாதார சரிவுக்கும் காரணம் காட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். மஹாராஷ்டிர மாநில தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், "தற்போதைய அரசானது எதிர்க்கட்சியினர் மீதும் எதிராளிகள் மீதும் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். பொருளாதார வீழ்ச்சிக்கான காரணிகளைக் கண்டறிந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதால் மிகவும் பாதிக்கப்பட்டது மகாராஷ்டிர மாநிலம் தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏகப்பட்ட தொழில் நிறுவனங்கள் இங்கு மூடப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 2018ம் ஆண்டில் இந்தியப் பொருளாதார மதிப்பு 2.7 லட்சம் கோடி டாலராக இருந்தது. அதை 2024ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த இலக்கு வைத்துள்ளனர். அந்த இலக்கை அடைவதற்குக் குறைந்தது 10 முதல் 12 சதவீத வருடாந்திர வளர்ச்சியை இந்தியா கொண்டிருக்க வேண்டும். மோடி அரசு ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சியைத்தான் சந்தித்து வருகிறது. 2024ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பை அடையச் சாத்தியமே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் ஏற்படும் சரிவுகளுக்கு முந்தைய அரசை குற்றம்சாட்ட முடியாது. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக நீங்கள் தான் ஆட்சியில் இருக்கிறீர்கள். அந்த ஐந்தரை ஆண்டுகளே பொருளாதார சரிவை மீட்டெடுக்க போதுமானது. அதை விட்டுவிட்டு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது குற்றம் சாட்டுவதால், எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவது இல்லை, நாங்கள் தவறு செய்துள்ளோம் என்றால், ஐந்தரை ஆண்டுகால ஆட்சியில் எங்களின் தவறுகளில் இருந்து புரிந்துக்கொண்டதை வைத்து, சரியான தீர்வை இந்த அரசு ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறிவிட்டது. சில இடங்களில் மதிப்பெண்களை பெறலாம், ஆனால் தீர்வுகளை உங்களால் கொடுக்க இயலவில்லை. இதனால் மொத்த நாடும் திண்டாடுகிறது. இந்திய பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கிறது. அதன் காரணமாக தான் எட்டப்பட வேண்டிய 8 - 10 சதவீத வளர்ச்சி விகிதத்தை, 5.5-6 சதவீதமாக மத்திய அரசு நிர்ணையித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் இதுவரை சந்திக்காத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை பெரிய அளவில் மகாராஷ்டிர மாநிலத்தை உலுக்கி எடுக்கிறது. மஹாராஷ்டிர மாநிலத்தின் உற்பத்தி விகிதம் தொடர்ந்து 4-வது ஆண்டாக வீழ்ச்சியடைந்து வருகிறது” என்று தெரிவித்தார். முன்னதாக நிதி நெருக்கடி மற்றும் மோசமான பொருளாதார சரிவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.                                                -MMH


Comments