70 ஆண்டுகளில், மந்தநிலை!!!
நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத நிலைமை என்று விவரித்துள்ளார் நிதி அயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார். அவர் மேலும், “கடந்த 70 ஆண்டுகளில் இதைப் போன்று, நிதித் துறை சறுக்கலைக் கண்டதில்லை ” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும்போது, நிதி அயோக் துணைத் தலைவரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. “அரசும், நிதித் துறையில் இருக்கும் சுணக்கங்கள் குறித்து கருத்தில் கொண்டுள்ளது. பிரச்னை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது. அது நிறுத்தப்பட்டாக வேண்டும்” என்று கூறிய ராஜிவ் குமார், “யாரும் யார் மீதும் நம்பிக்கை வைத்து நடக்கவில்லை . அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் மட்டும் இதைப் போன்ற பிரச்னை இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு மத்தியிலும் இதே சிக்கல்தான். யாரும் எதையும் தலைமை தாங்கி நடத்த தயாராக இல்லை . எப்போதும் எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தவிர்த்து புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். தனியார் துறையில் நிலவும் சிக்கல்களைக் கலைய அரசு, தன்னால் ஆன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று விளக்கினார். கடந்த ஜனவரி - மார்ச் மாதத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி, 5.8 சதவிகிதம்தான் வளர்ச்சி பெற்றுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி முடிவடைந்த, நிதி ஆண்டிற்கான ஜி.டி.பி வளர்ச்சி வெறும் 6.8 சதவிகிதமாக இருந்தது. தற்போதை நிதி ஆண்டின் முதல் காலாண்டில், ஜி.டி.பி வளர்ச்சி, 5.7 சதவிகிதமாகத்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குறைவான நுகர்வு, மிகவும் குறைந்த முதலீடுகள், சேவைத் துறையில் சுணக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஜி.டி.பி வீழ்ச்சி ஏற்படும் என்று நோமுரா (Nomura) தகவல் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ஜூலை- செப்டம்பர் காலாண்டில், பொருளாதாரம் சற்று ஏற்றம் காணும் என்றும் நோமுரா கூறுகிறது.
-MMH
Comments