RTO அலுவலகங்களில் லஞ்ச வேட்டை !!!...
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது, அதை தடுக்க நடவடிக்கை . வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புரோக்கர்களின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வாகன ஓட்டிகளுக்கு எல்எல்ஆர், ஓட்டுநர் உரிமம், புதிய வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் வழங்குதல், வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்குதல், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்துதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. இந்த அலுவலகங்களில் புதிய வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ் காகித வடிவிலான ஆவணங்களாகவும், ஓட்டுநர் உரிமம் பிளாஸ்டிக் அட்டை வடிவிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நவீனப்படுத்தி 'சிப்' பொருத்தப்பட்டு ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுகிறது. மேலும், கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைனில் செலுத்தப்படுகிறது. இந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புரோக்கர்கள், பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். இதனால் அங்கு லஞ்சம், ஊழல் அதிகமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனிடையே, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தற்போது உள்ள நடைமுறைக்கு பதில், மின்னணு முறையில் கொண்டுவரப்படும் ஹெச்.டிராக் என்ற நடைமுறையை எதிர்த்து தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ரகசிய கண்காணிப்பு சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும். எவ்வித குறைபாடுமின்றி 24மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்பு கேமரா இருக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குள் பயிற்சி பள்ளி ஊழியர்கள், தரகர்கள் நுழைவதை தடுக்க சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அங்கு திடீர் ஆய்வு மேற்கொள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் சிறப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். லஞ்சம் வாங்குவோர் மீது கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 146 வட்டார போக்குவரத்து அலுவலங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. சேலம் சரகத்தில் சேலம் கிழக்கு, மேற்கு, சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சிசிடி கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. அலுவலகத்தில் நடக்கும் அனைத்து பணிகளும் கேமராவில் பதிவு செய்யப்படும். இதன் மூலம் புரோக்கர்களின் நடமாட்டம் குறைய வாய்ப்புள்ளது. இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், "புரோக்கர்களின் வருகையை தடுக்கும் வகையிலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாகவும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வயரிங் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இப்பணியை எல்காட் நிறுவனம் செய்து வருகிறது. கோவையில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தற்போது சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, சங்ககிரி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் கேமரா பொருத்தப்படவுள்ளது,'' என்றனர்.
PRESS TEAM
G.INDIRA DEVI &
Comments