பிக்பாஸ் நடிகர், தாய்க்கும், சிறைத்தண்டனை!?

சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 'பிக்பாஸ்' போட்டியாளர், சின்னத்திரை நடிகர், உதவி இயக்குனர் கவினின் தாய், சகோதரி, அண்ணிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிக்பாஸ் - சீசன் 3-ன் போட்டியாளர்களில் ஒருவராக தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார் கவின். இவர் தனியார் தொலைக்காட்சியின் பிரபல சீரியலிலும் நடித்து புகழ்பெற்றவர், துணை இயக்குனராகவும் உள்ளார். திருச்சி கே.கே. நகர்ப் பகுதியைச் சேர்ந்த கவினின் தாயார் தமயந்தி. இவருக்கு கவின் தவிர சொர்ணராஜன் என்கிற மகனும், ராஜலட்சுமி என்ற மகளும் உள்ளனர். சொர்ணராஜனுக்கு திருமணமாகி ராணி என்ற மனைவி இருக்கிறார். ராஜலட்சுமிக்கும் திருமணமாகிவிட்டது. அவரது கணவர் பெயர் அருணகிரி. அனைவரும் கூட்டுக்குடும்பமாக உள்ளனர். தமயந்தியின் கணவர் அருணகிரி மற்றும் மகன் சொர்ணராஜன் உள்ளிட்ட குடும்பத்தார் அந்தப் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. சீட்டுக்கம்பெனியை 1998-ம் ஆண்டிலிருந்து 2006 -ம் ஆண்டு வரை நடத்தியுள்ளனர். பின்னர் திடீரென சீட்டுக்கம்பெனியை மூடிவிட, சீட்டு கம்பெனியில் பணம் கட்டிய 34 பேர் தங்களுக்கு பணம் தராமல் மோசடி செய்துவிட்டார்கள் என ரூ 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பிக் கேட்டு கடந்த 2007 -ம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவில் 34 பேரும் புகார் அளித்தனர். புகாரைப்பெற்று விசாரணை நடத்திய போலீஸார் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சொர்ணராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இடையில் மரணமடைந்தனர். மற்ற 3 பேர் மீது வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கவினின் தாயார் தமயந்தி, அண்ணி ராணி மற்றும் சகோதரி ராஜலட்சுமி ஆகியோருக்கு மோசடி வழக்கில் 5 வருடச் சிறைத் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும், சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி இரண்டு வருடச் சிறைத் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும், சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. | மேலும் சீட்டுக்கட்டி ஏமாந்த 34 பேருக்கும் பணத்தை திரும்ப வழங்கும்படியும் உத்தரவிடப்பட்டது.


                                                                                                                                                     


Comments