இந்த உப்பு போட்டு சாப்பிடாதீர்கள்..!

இந்த உப்பு போட்டு சாப்பிடாதீர்கள்..! மந்த புத்தி ஏற்படும் தோல் பதனிடப் பயன்படுத்தும் கல் உப்பை சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து, சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பு என்று ஏமாற்றி விற்பதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புற மக்களைக் குறிவைத்து நடக்கின்ற உப்பு மோசடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... இந்தியாவில் உப்பு உற்பத்தியில் குஜராத் முதலிடத்தில் இருந்தாலும் 2வது இடத்தை பெற்றுள்ள தமிழகத்தில் தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் பகுதிகளில் உப்பு உற்பத்தி நடக்கிறது. இங்கிருந்து தான், நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படுகின்ற உப்பு, பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வருகின்றது. தினமும் 6 கிராம் முதல் 10 கிராம் வரையிலான உப்பு சமையலில் சேர்க்கப்படும் நிலையில், இந்த உப்பில் குறைந்த பட்சம் 15ppm என்ற அளவில் அயோடின் சேர்க்கப்பட்டிருந்தால் தான் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும்..! நகர்ப்புற மக்கள் பெரும்பாலும் அயோடின் கலந்த தூள் உப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிராமப்புறங்களில் நடத்திய ஆய்வில், சமையலுக்கு பயன்படுத்த தகுதியற்ற உப்பை, மக்கள் வாங்கிப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இந்த உப்பு தோல் பதனிடவும், தென்னை வளர்ப்புக்கு உரமாகவும் பயன்படுத்தப்படும் காரத்தன்மை கொண்ட கல் உப்பு என்றும், அதனை சிறிய பாக்கெட்டுக்களில் அடைத்து, சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு என்று குறைந்த விலைக்கு விற்க்கப்படுவதாகவும், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. உப்பு உற்பத்தியாளர்களிடம் இருந்து, மூட்டைக் கணக்கில் இந்த உப்பை வாங்கி, அதில் அயோடின் கலக்காத கல் உப்பை போலியான பெயர்களில் சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து மளிகைக் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அயோடின் கலந்த உப்பு விலை அதிகம் என்பதால், கிராமப்புற பெண்கள் தயக்கமின்றி இந்த கல் உப்பை வாங்கிச் செல்வதாகவும், அவர்கள் சமையலுக்குத் தான் வாங்கிச்செல்கின்றனரா ?என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் ஆய்வுக் குழுவினரிடம் கடைக்காரர்கள் சமாளித்துள்ளனர். மேலும், அந்த உப்பு பாக்கெட்டின் ஒரு பகுதியில் சிறிய அளவில் இது பதப்படுத்தும் பயன்பாட்டுக்கு மட்டும் என்பது போன்று ஆங்கிலத்தில் அச்சிட்டு உள்ளதை சுட்டிக்காட்டி தப்பித்துக் கொள்வதாகவும் அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் கிராமப்புறங்கள், சிறுநகரப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடையில் விற்கப்படும் கல் உப்பு மாதிரிகளை ஆய்வு செய்தபோது, 26 சதவிகித உப்பு பாக்கெட்டுகளில் அயோடின் சத்தே இல்லாமலும், 15 ppm க்கு குறைவாக அயோடின் இருந்ததும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய கல் உப்பை சமையலில் சேர்த்து சாப்பிடுவது, மெல்லக் கொல்லும் விஷத்தை சாப்பிடுவதற்கு சமம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இந்த உப்பைத் தொடர்ந்து சாப்பிடுவதால், பெண்களுக்கு கருச்சிதைவு, தைராய்டு சுரப்பி செயல்பாடு குறைவு, சிறுவர்- சிறுமிகளுக்கு மன வளர்ச்சியின்மை , அறிவுத்திறன் குறைபாடு, உடல் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுவதும், வாலிப வயதுடைந்தவர்கள் மந்தபுத்தியுடன் இருப்பார்கள் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


                L.THRUMAL 


Comments