தந்தையே குழந்தையை வைத்து பிச்சை !

கோவையில் பிறந்த குழந்தையை வைத்து தந்தையே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த காவல்துறையினரும், சமூக ஆர்வலரும் குழந்தையை மீட்டு சைல்டு லைன் அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டுகளை பெற்றுள்ளது. நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில், சில பெற்றோர்கள் தங்களது ஏழ்மையை காட்டி பேருந்து நிறுத்தங்கள், கடைவீதிகள், சிக்னல்கள் என மக்கள் கூடும் பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், ஒரு சில நேரங்களில் கடத்தப்படும் குழந்தைகளை வைத்தும் பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. இப்படி சந்தேகிக்கும் நபர்களை கண்டால் பல இடங்களில் சமூக ஆர்வலர்கள் 1098 என்ற சைல்ட் லைன் எண்ணிற்கு அழைத்து தங்களது புகார்களை தெரிவித்து குழந்தைகளை மீட்டும் வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஆவின் பூத் அருகே சந்தேகத்துக்கிடமான நிலையில் 32 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், பிறந்த சில மாதங்களே ஆன குழந்தையை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த க.க சாவடி காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் சிந்துவும், சுடர் அறக்கட்டளையின் அறங்காவலர் பாபுவும் பசியால் துடித்த குழந்தையை அந்த நபரிடம் இருந்து வாங்கி மனித நேயத்துடன் பால் வாங்கி குடிக்க வைத்தனர். மேலும், உடம்பெல்லாம் புண்களாய் இருந்த குழந்தையை துணியால் தூய்மை செய்தனர். இதையடுத்து, குழந்தை வைத்திருந்த நபர் தான் குழந்தையின் தந்தை என தன்னை அறிமுகம் செய்தார். பின்னர், சிறிது நேரத்தில் குழந்தையை அலட்சியமாக வைத்திருந்த தாயாரும் குழந்தையை தங்களிடமே தரும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், அங்கிருந்தவர்கள் அவர்களின் மீது நம்பிக்கை இல்லாததால் சைல்டு லைன் அமைப்பிற்கு அழைத்து குழந்தையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, குழந்தையை மீட்ட சைல்ட் லைன் அதிகாரிகள் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், பெற்றோர்களை சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் பெற்றோர்களால் குழந்தைக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், குழந்தையின் தாயாரிடம் சைல்டு லைன் அதிகாரிகளும், குழந்தை நல குழுவினரும், சமூகநல துறையினரும் குழந்தையின் பாதுகாப்பிற்காக காப்பகத்தில் வைக்க கேட்டுக் கொண்டனர். மேலும், தேவைப்பட்டால் தாய் மற்றும் குழந்தை என இருவருக்கும் காப்பகம் ஏற்பாடு செய்து தருவதாகவும் உத்தரவாதம் அளித்தனர். ஆனால், இதை ஏற்காத குழந்தையின் தாயார் குழந்தையை நாங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம் என எழுத்து மூலம் எழுதிக் கொடுத்து குழந்தையை பெற்று சென்றனர். இந்த சம்பவத்தில் குழந்தையை பாதுகாப்பில்லாமல் வைத்திருப்பதும் குழந்தையை வைத்து பிச்சை எடுப்பதும் தவறு என்பதை உணர்ந்து காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இணைந்து சமூக அக்கறையுடன் செயல்பட்டது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.


Comments