போலி மருந்துகள் 26
தரமற்ற 26 மருந்துகள் பட்டியல் வெளியீடு சென்னை: 'விற்பனையில் உள்ள 26 வகையான மருந்துகள் தரமற்றவை' என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளையும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. அதில் போலி மருந்துகள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி ஜூன் மாதத்தில் 843 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 817 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு, இருமல், கிருமித் தொற்று, வயிற்றுப் புண் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படும் 26 மருந்துகள் போலியாகவும், தரமற்றவையாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதன் விபரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் பெரும்பாலானவை உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. 'தரமற்ற மருந்துகள் தயாரித்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments