ஹெல்மெட் அணியாமல் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்வது
சென்னை: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வருடம் 24 லட்சத்து 205 மாணவர்களுக்கு இலவச பேருந்து சலுகை அட்டைகள் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் மூலம் இதனை வழங்கவுள்ளோம். பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை, மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்திருந்தால் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 31,143 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 1,009 வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு குறைவாக இருந்ததால் இயக்க அனுமதிக்கவில்லை . பின்னர் அவற்றை சரி செய்த பின்னர் இயக்க அனுமதிக்கப்பட்டது. 1,143 பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்க தகுதியற்றதாக கருதி நிறுத்தப்பட்டுள்ளது. மீறி இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறித்து பரிசீலிக்கப்படும். விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால்தான் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. பொதுவாக நகரங்களை விட கிராமப்புறங்களில்தான் ஹெல்மெட் போடுவதை கடைபிடிக்காமல் இருக்கிறார்கள். கிராமங்களில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. 2000 மின்சார பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Comments