வாயு புயல் மக்களை பாதுகாப்பான

குஜராத்தில் வாயு புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், 3 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற மாநில அரசு முழுகட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வாயு புயலாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக மாறி, குஜராத் மாநிலம், போர்பந்தர் மற்றும் மஹூவா பகுதியில் நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் வருகிற 13, 14 ஆம் தேதி குஜராத்தில் கன மழை பெய்யும் எனவும், புயல் கரையை கடக்கும் போது 110 கி.மீ முதல் 120 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும். குறிப்பாக கடலோர பகுதியான சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை குஜராத கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60-70 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இன்று இரவுக்குள் அந்த வேகம் 110120 கிமீ வேகமாக அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீனவர்கள் இன்று முதல் வரும் ஜீன் -14 வரை அரபிக் கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்கை கருதி, குஜராத் மற்றும் டியூ ஆகிய இடங்களில் கடலோரத்தில் வசிக்கும் சுமார் மூன்று லட்சம் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற குஜராத் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 700 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 39 தேசிய பேரிடர் படையினரும் 34 ராணுவப் படையினரும் மீட்புப் பணிகளுக்காக தயாரன நிலையில் உள்ளனர். இந்நிலையில் புயல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் புயலில் இருந்து மக்களை பாதுகாக்கவும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை அப்புறப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. புயலால் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடக மற்றும் டாமன் - டையூ யூனியன் பிரதேச அரசுகளுடன் தொடர்பு கொண்டு, ஏற்பாடுகள் குறித்த தகவல்களை சேகரிக்கும்படி, அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்


Comments